அண்ணாமலை பாதயாத்திரைக்கு அனுமதி மறுப்பு..! நோட்டீஸ் கொடுத்த போலீஸ்!!
அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு எதிராக தமிழக காவல்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்ணாமலை பாதயாத்திரை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகின்றார். 9 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியை மக்களுக்கு எடுத்துக்கூறி மீண்டும் பிரதமர் மோடியே மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என பிரச்சாரத்தை அவர் தொடர்ந்து வருகின்றார்.
நேற்று திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ள உள்ளார். அதற்கு தற்போது புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அனுமதி மறுப்பு
அவர்கள் மறுத்து தெரிவித்ததற்கு காரணமாக காவல் துறை சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி, யாத்திரை நடைபெறும் பகுதிகளில் மத வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அனுமதி மறுப்பு நோட்டீஸ்'ஸை ஏற்காமல் பாஜகவினர் காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாற்று பாதையில் பாதயாத்திரையை மேற்கொள்ள காவல் துறையினர் பேசி வருவதாக கூறப்படுகிறது.