வாக்களிக்குமாறு அடம்பிடித்த குழந்தைகள் - விஜய் மீது போலீஸில் புகார்!
குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் செய்ல்பட்டமைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளிலும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்டது. இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, அவர் சுயேச்சையாக அங்கு போட்டியிட்டார்.

விஜயை பொறுத்தவரை, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து, வரும் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக தலைவர் விஜய், “நண்பா, நண்பி.. உங்கள் வீட்டில் இருக்கும் பெற்றோர்களை தவெக சின்னத்தில் ஓட்டுப்போட சொல்லுங்கள்” என பேசியிருந்தார்.
அதனால், குழந்தைகள் பலரும் “விஜய் மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க” என பலரும் சத்தியம் பெற்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீது விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகார் மனுவில், “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் மேற்கொண்ட பரப்புரையின் போது ‘விஜய் மாமாவிற்கு’ உங்களுடைய பெற்றோரிடம் அடம் பிடித்து விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வையுங்கள் என கோரிக்கை வைத்தார்.
விஜய் வைத்த கோரிக்கையின் காரணமாக என்னுடைய ஐந்து வயது மகன் ‘விஜய்யின் விசில் சின்னத்திற்கு’ வாக்களிக்க அடம் பிடித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
என்னுடைய குழந்தையும் உளவியல் ரீதியாக பாதிப்படைந்துள்ளது. என் குடும்பம் மட்டும் இல்லாமல் என்னுடைய நண்பர்கள் குடும்பத்தினரும் இதுபோன்று பாதிப்படைந்துள்ளனர்.
உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த காரணமான விஜய் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.