மக்களவை தேர்தல்: த.வெ.க தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார் - என்ன காரணம்?
த.வெ.க தலைவர் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான நேற்று தொடங்கியது. இந்த தேர்தலானது வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது. காலை முதலே பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர்.
விஜய் மீது புகார்
அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது அங்கு கூட்டம் அலைமோதியதால் அவர் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.
இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், விஜய் 200-க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.