வாயை விட்டு மாட்டி கொண்ட எதிர்நீச்சல் மாரிமுத்து - குவியும் புகார்கள்..!
ஜீ தமிழின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களுக்கும், ஜோதிடத்திற்கும் எதிராக நடிகர் மாரிமுத்து பேசிய காரணத்தால் தற்போது அவர் மீது காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்துள்ளது.
Trending ஸ்டார்
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரில் நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று தற்போது பிஸி நடிகராக வலம் வருபவர் நடிகர் மாரிமுத்து.
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவிற்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள இவர், பின்னர் நடிகராக மாறி தற்போது சின்னத்திரையில் பிஸியாக உள்ளார்.
எதிர்மறையான கதாபாத்திரத்தில் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் மாரிமுத்துவின் தனித்துவமான நடிப்பால் அவர் தற்போது trending ஸ்டாராக உள்ளார்.
தொடரில் இவர் பேசும் மதுரைச் சார்ந்த தமிழ் வசனங்களும், கோபமான மொழிநடையும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன.
ஜோதிடம் குறித்து கொந்தளித்த மாரிமுத்து
அண்மையில் இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழிச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில், ஜோதிடத்தை குறித்து விவாதம் நடைபெற்றது.
இதில் மாரிமுத்து ஜோதிடத்திற்கும், ஜோதிடர்களுக்கு எதிராக கருத்துக்களை சரமாரியாக முன்வைத்தார். குறிப்பாக நம் நாடு பின் தங்கி இருப்பதற்கு ஜோதிடர்கள் தான் காரணம் என மாரிமுத்து சாட, அவருக்கும் ஜோதிடர்களுகளும் அது வாக்குவாதத்தில் முடிந்தது.
இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக ஜோதிடர்கள் பலரும் மாரிமுத்துவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காவல் நிலையத்தில் புகார்
இதில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதி ஜோதிடர்கள் மாரிமுத்துவிற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். 30'க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இந்த புகாரின் அடிப்படையில், நடிகர் மாரிமுத்து மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பிரபலமாக நடித்து வரும் நேரத்தில், தேவையில்லாமல் பேசி மாரிமுத்துவே தன்னுடைய கேரியரை சிக்கலில் மாட்டிவிடுகிறார் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.