தேர்தல் பறக்கும் படை புகார் - அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு!
தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறிமுக கூட்டம்
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
இதில், அதிமுக சார்பில் தென்சென்னை தொகுதி வேட்பாளராக ஜெயவர்தன் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தப்பட்டது.
வழக்குப்பதிவு
இந்நிலையில் வேட்பாளர் ஜெயவர்தன மற்றும் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி ஆகியோர் மீது தேர்தல் பறக்கும் படை புகார் அளித்துள்ளது. அதில், பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடிகளை கட்டியதுடன், முறையான அனுமதி இன்றி கூட்டம் கூட்டினார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் தேர்தல் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.