ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் மீது தாக்குதல் - காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!
கோவையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் புகுந்து சாப்பிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இதன் காரணமாக தமிழக அரசு மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும், இரவு நேரங்களில் உணவகங்களுக்கான நேரக்கட்டுப்பாடும் அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று கோவையில் உள்ள ஒரு உணவகத்திற்கு உதவி ஆய்வாளர் முத்து வந்துள்ளார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை என்று கூறி சாப்பிட்டுக் கொண்டவர்களிடம் வெளியே போகச் சொல்லிக் கூறியிருக்கிறார். அதோடு அல்லாமல், சாப்பிட்டவர்கள் மீது லத்தியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். உணவகத்தை மூடக் கூறி அவர் சத்தமும் போட்டுள்ளார். அவர் லத்தியால் தாக்கியதில் ஒரு பெண் உட்பட, 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, நேற்று காலை காவல் உதவி ஆய்வாளர் முத்துவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்ற, கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோவை மாநகர ஆணையருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
