அநியாயத்தை தட்டிகேட்ட மாணவர் - அடித்து வாயை கிழித்த இன்ஸ்பெக்டர்!
கல்லூரி மாணவர் ஒருவர் இன்ஸ்பெக்டரிடம் நியாயத்தை கேட்டபோது அவரை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்துவிட்டு, அவை இல்லாதவர்கள் மீது வழக்கு மற்றும் அபராதம் விதித்து அனுப்புவது வழக்கம்.
அதன்படி மே 12 ஆம் தேதி மாலை போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவன் தினேஷை நிறுத்தி ஆவணங்களைக் காட்டச் சொன்னார்.
ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்த நிலையிலும் ஹெல்மட்டுடன் வந்த மாணவருக்கு ரூ.1000 அபராதம் விதித்து அவருக்கு ரசீதை கொடுத்துள்ளார்.
அதை வாங்க மறுத்த கல்லூரி மாணவன் தினேஷ் மற்றும் அவரது நண்பர் விஜய், எங்களிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளது என ஆய்வாளர் ராமச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அடித்த காவலர்
இந்நிலையில், ஆய்வாளர் மோதிரம் அணிந்த கையால் மாணவனை தாக்கியதால் மாணவரின் உதடு கிழிந்துள்ளது. இதனால் தினேஷுக்கு ரத்தம் வழியத் தொடங்கியது.
உடனே தினேஷ் அவரது தந்தைக்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வரச் சொல்லி அழுதுள்ளார்.
அவருடன் சேர்ந்து அப்பகுதி மக்களும் சேர்ந்து கொள்ளவே திடீரென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர், அதனால் பரபரப்பான சூழல் நிலவியது.
அங்கு விரைந்து வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு உட்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு திரண்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடி வாங்கிய மாணவனிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.