குட்கா விற்பனை செய்து வந்த இருவரை கைது செய்த போலீஸ் - மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
சென்னை கொடுங்கையூரில் வாகனத்தில் கடத்தி வந்த 1 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது.
சென்னை கொடுங்கையூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்று எழில் நகர் பகுதியில் கொடுங்கையூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் 500 கிலோ குட்கா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹபீப் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேதாஜி நகர் 2வது தெருவில் உள்ள ஒரு குடோனில் மேலும் 500 கிலோ குட்காவை கொடுங்கையூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு 15 லட்சம் ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்ட இருவரிடமும் கொடுங்கையூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முருகன் என்கின்ற பீடி முருகன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.