பட்டாக்கத்தியுடன் தகராறு செய்த இளைஞர்களை கைது செய்த போலிஸார்
குடிபோதையில் , பட்டா கத்திகளை வைத்து கடைகளை அடித்து உடைத்த ரவுடிகளின் வீடியோ வெளியானது. இந்த சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட மேலும் 4 பேர் கைது.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் வியாசர்பாடி பெரியார் நகர் ராஜாங்கம் தெருவில் உள்ள எஸ்.பி ஏஜென்சிஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் , கருப்பசாமி நிறுவனத்தின் வெளியே சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த பட்டாக் கத்தியால் கருப்ப சாமியின் முதுகில் வெட்டி விட்டு சரக்கு வாகனத்தின் கண்ணாடியையும் உடைத்தார்.
அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த இறைச்சிக் கடை மற்றும் மளிகை கடை ஆகிய கடைகளுக்குள் நுழைந்த அந்த நபர் அங்குள்ள கண்ணாடிகளை பட்டாக் கத்தியால் குத்தி உடைத்த தோடு அங்கிருந்தவர்களையும் தெருவில் நடந்து சென்றவர்களையும் பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டினார்.
அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே செம்பியம் ரோந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல் துறையினரை கண்டதும் பட்டாக் கத்தியுடன் மிரட்டி வந்த நபர்கள் தப்பி ஓட முயல பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் ஒருவரை மட்டும் வளைத்துப் பிடித்து அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இவருடன் மேலும் 4 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. போலீஸார் விசாரணையில் அந்த நபர் வியாசர்பாடி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பதும் குடிபோதையில் பட்டாக் கத்தியுடன் மிரட்டி பொதுமக்களை காயப்படுத்தியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து மகேஷை கைது செய்த செம்பியம் காவல்துறையினர் அவனிடம் நடத்திய விசாரணையில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கருணாகரன் சார்லஸ், கோகுல கிருஷ்ணன் மற்றும் வயது சிறுவன் ஆகிய 4 பேரும் மகேஷடன் சேர்ந்து குடிபோதையில் கடைகளில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த செம்பியம் போலீசார் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.