சிறுவர்களிடம் ஆபாச பேச்சு - தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை கைது செய்த போலீஸ்
மதன் என்பவர் பப்ஜி கேம் விளையாடும்போது சிறுவர்களுடன் ஆபாசமாக பேசி பல லட்சம் சம்பாதித்ததாக புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தது. அவருடைய யூ-ட்யூப் சேனல்களும் முடக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மதன் தலைமறைவாகியிருந்தார். காவல்துறையினர் முடிந்தால் தன்னைப் பிடித்துக் காட்டுங்கள் என சவால்விட்டார். அவருடைய மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பப்ஜி விளையாட்டு மூலம் அவர் வாங்கிய சொகுசு கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை இன்று காலை தர்மபுரியில் தலைமறைவாக இருந்துள்ள பப்ஜி மதனை கைது செய்துள்ளது. இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.