நூதன வழியில் மதுபான விற்றவர்களை கைது செய்த காவல்துறை
தர்பூசணி பழம் விற்பது போல மதுபானத்தை பதுக்கி விற்பனை செய்த இரண்டு பேர் கைது. 270 மதுபாட்டில்கள் பறிமுதல்.
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியில் மினி வேன் ஒன்றில் தர்பூசணப் பழங்கள் விற்பனை செய்துள்ளனர்.
அதில் மறைத்து வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வண்டியை சோதனை செய்த போது அதில் ஆந்திராவிலிருந்து எடுத்து வரப்பட்ட 270 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வண்டியில் இருந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் என்பவரையும் மாதவரம் பகுதியைச் சேர்ந்த சுதர்சனம் என்பவரையும் கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் பழம் விற்பது போல ஆந்திராவிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.