காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, பெண் போலிஸை ஆபாசமாக பேசியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது யாஷீம்.
இவருக்கும் நரியம்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணமாகி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த முகமது யாஷீம் மது அடிமைக்கு ஆளாகியுள்ளார். அப்படியிருக்க நேற்று இரவு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போனில் தொடர்பு கொண்டு போதையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாச வார்த்தைகளால் பேசியும், ஆர். டி.எஸ் வெடிகுண்டு என்றால் என்ன தெரியுமா? உமராபாத் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த பெண் காவலர் உமராபாத் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் முகமது யாஷிமை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு 505, 506 உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.