ஏலகிரியில் கள்ளநோட்டு அச்சிடுபவரை கைது செய்த காவல்துறை
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் குமார் என்பவரின் கடையில் கடந்த 7-ம் தேதி திருடு நடந்துள்ளது. அதில் 40 ஆயிரம் ரொக்கப்பணம், சிசிடிவி கேமிராக்கள் திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 13-ம் தேதி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை ஏலகிரி காவல் துறையினர் பிடித்து விசாரித்த போது வேலூர் மாநகருக்கு உட்பட்ட விருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் கள்ள நோட்டுக்களை அச்சிடுவது தெரியவந்தது.
இதனையடுத்து ஏலகிரி காவல் துறையினர் கைதான சம்பத்தை வேலூர் அழைத்து வந்து விருப்பாச்சிமுரம் மற்றும் துத்திப்பட்டு பகுதியில் சோதனை செய்ததில் துப்பட்டில் உள்ள அவரது மனைவி வீட்டில் கள்ளநோட்டை அச்சடிக்க பயன்படுத்தப்படும் ஜெரக்ஸ் மிசின் மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து 80 ஆயிரம் மதிப்பிலான 200 ரூபாய் கள்ள நோட்டுகளையும், ஜெரக்ஸ் மிசினையும் ஏலகிரி காவல் துறையினர் பறிமுதல் செய்து பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
ஏலகிரி காவல் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஏலகிரி காவல் துறையினர் சம்பத்தை ஏலகிரி அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்ட வாடிக்கையாளருக்கு 200 ரூபாய் நோட்டு கள்ளநோட்டை பங்க் ஊழியர்கள் வழங்கியதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் சம்பத் தனி ஆளாக செயல்படுகிராறா? அல்லது இவருக்கு பின்னால் கள்ள நோட்டு கும்பல் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.