போலீசார் எங்களை மிரட்டுகின்றனர் - கதறும் வேங்கைவயல் கிராம மக்கள்
குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி தங்களை சிபிசிஐடி போலீஸார் மிரட்டுவதாக வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம்
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்துவரும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டிருந்த விவகாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுதொடர்பான வழக்கை விசாரிக்க 2 டிஎஸ்பிக்கள், 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 11 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த விசாரணைக் குழுவானது உள்ளூர் மக்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள வலியுறுத்தியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து கடந்தமாதம் 14-ம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல் துறையினரும் முழுவீச்சில் தங்கள் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
கண்ணீர் மல்க புகார் அளித்த மக்கள்
இந்தநிலையில் இவர்களும் தங்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதாக வேங்கைவயல் கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று நேரில் சென்று இதுகுறித்து புகார் மனு அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், 'தனிப்படை போலீஸாரைப் போலவே சிபிசிஐடி போலீஸாரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி எங்களை வற்புறுத்துகிறார்கள். இக்காவலர்கள் திருச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று தகாத வார்த்தைகளால் பேசி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்கிறார்கள்' என்று கூறியுள்ளனர்.
இதன் மூலம் தங்களுக்கு பெரும் மனஉளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் இந்த கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்படாமல் இழுத்தடித்துக் கொண்டே செல்வதன் பின்னணியில் சாதிய அமைப்புகளின் அழுத்தங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.