எலிக்கு வைத்த விஷம் தடவிய கேரட்டை சாப்பிட்ட மாணவி பரிதாப பலி - அதிர்ச்சியில் உறைந்து போன பெற்றோர்

Poisoned carrots Student tragically killed
By Nandhini Feb 03, 2022 09:08 AM GMT
Report

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே எலியை கொல்வதற்காக வைக்கப்பட்ட விஷம் தடவிய கேரட்டை சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் தேவசித்து (55). இவரது மனைவி கிரேஷியம்மா (52). இவர்களது மூத்த மகள் எனிமா ஜாக்குலின் (19). இவர் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கிரேஷி அம்மா, தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 31ம் தேதி எலி தொல்லை காரணமாக கேரட்டில் விஷம் தடவி வீட்டில் வைத்திருக்கிறார். இதனை அறியாத எனிமா ஜாக்குலின் கேரட்டை எடுத்து சாப்பிட்டிருக்கிறார்.

சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், எனிமாவை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி எனிமா ஜாக்குலின் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலியை கொல்ல கேரட்டில் விஷம் தடவிய நிலையில், அதனை கல்லூரி மாணவி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.