மீன் குழம்பில் விஷம்: குடும்பத்தை கொல்ல சதி செய்த கணவன்- திடுக்கிட வைக்கும் சம்பவம்
டெல்லியை சேர்ந்த வருண் அரோரா என்பவர் தன்னுடைய குடும்பத்தினரை கொல்வதற்காக மீன் குழம்பில் விஷம் கலந்து கொடுத்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக கடும் கோபத்தில் இருந்த வருண் அரோரா, குடும்பத்தை கொல்ல திட்டமிட்டார். இதற்காக மீன் குழம்பில் தாலியம் என்ற விஷத்தை கலந்து கொடுத்துள்ளார், இதை சாப்பிட்டு மனைவியின் தாய் மற்றும் தங்கை பலியான நிலையில், வருணின் மனைவி கோமா நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

தாலியத்தின் பாதிப்பினால் மனைவியின் தந்தையும், வீட்டில் வேலை செய்யும் பெண்ணும் உடல்நலக் குறைவுக்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனை தொடர்ந்து அவர்களது வீட்டில் சோதனை நடத்தியதில் தாலியம் கண்டறியப்பட்டது, மேலும் கடந்த ஜனவரி மாதம் வருண் அரோரா, மீன் குழம்பு வாங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், வருண் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் தன்னை மனிதாபிமானம் இல்லாமல் மனைவியின் குடும்பத்தினர் நடத்தியதால் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.