விஷம் கலந்த வாழைப்பழத்தை தின்ற வாலிபர் பலி
எலிக்கு வைத்திருந்த விஷம் கலந்த வாழைப்பழத்தை தின்ற கல்லுாரி மாணவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சிராங்குடியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்; மனைவி தமிழ்ச்செல்வி; மகன்கள் கார்த்திக், 19; கவிதாஸ், 15.இதில் கார்த்திக், தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 18ம் தேதி மாலை, கார்த்திக் விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது, 'டிவி' மீது இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்டுள்ளார். அதன்பின், இரவு கார்த்திக் திடீரென வாந்தி எடுத்து, வயிறு வலிப்பதாக கதறி அழுதுள்ளார். தமிழ்ச்செல்வி கேட்டபோது, 'டிவி' மீது இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்டதாக கார்த்திக் தெரிவித்தார்.
பதறிப்போன தமிழ்ச்செல்வி, அந்த பழம், எலிக்காக விஷம் கலந்து வைத்தது எனக் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து, கார்த்திக்கை, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின், மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருந்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து மதுக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.