அப்ப வேண்டாம்... இப்ப வேணும்... கள்ளக்காதலனுக்கான பெண் செய்த அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் கள்ளக்காதலன் மீது பொய் புகார் கொடுத்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த அபிராமி(36) என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இதனிடையே பள்ளி படிக்கும் மகள் மற்றும் மகனுடன் தனிமையில் வசித்து வந்த அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் திடீரென அபிராமிக்கும், கள்ளக்காதலன் ஜார்ஜ் பெர்ணாண்டஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மகளுக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியிலும் அபிராமி ஈடுபட்டார். இதனையடுத்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது போக்சோ உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓராண்டுக்குப் பிறகு ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் அபிராமிக்கும் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் அபிராமியின் பிள்ளைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கு கடந்த மார்ச் மாதம் 7ம்தேதி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அபிராமி ஜார்ஜ் பெர்னாண்டஸை காப்பாற்ற, அச்சமயத்தில் அவர் மீது பொய்யான போக்சோ புகார் அளித்ததாக கூறினார். இதனையடுத்து பொய்யான போக்சோ புகார் கொடுத்ததற்காக அபிராமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜார்ஜ் பெர்ணாண்டஸுக்கும் தனக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பொய்யான போக்சோ புகார் கொடுத்ததாகவும், தற்போது தானும் அவரும் சேர்ந்து வாழ ஆசைப்படுவதால் உண்மையை நீதிமன்றத்தில் கூறியதாகவும் அபிராமி தெரிவித்துள்ளார்.