நெருங்கும் ஹரியானா சட்டமன்ற தேர்தல்..பிரதமர் மோடி தலைமையில் தீவிர ஆலோசனை!
ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதக் காலமே உள்ள நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஹரியானா
2024 ஹரியானா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தல் 90 சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற உள்ளது.இந்த நிலையில் ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தல் பணி குறித்து பாஜக மத்தியத் தேர்தல் குழு, டெல்லியில் ஆலோசனை நடத்தியது.
ஆலோசனை
இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, ஹரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனி ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளவர்களில் சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.