அன்புமணி நீக்கமா? பாமக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
அன்புமணி ராமதாஸிற்கு எதிராக பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக உட்கட்சி மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக கட்சியில் மோதல் போக்கு நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்குவது, புதிய பொறுப்பாளரை நியமிப்பது,தனிதனியாக ஆலோசனை கூட்டம் நடத்துவது என தனி தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக நிர்வாகக் குழுவை கலைத்து விட்டு, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அறிவித்தார். அதில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெயர் இடம் பெறவில்லை.
இந்நிலையில், இன்று திண்டிவனம் அருகே ஓமந்துாரில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த செயற்குழுவில், கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
இதில் ,11வது தீர்மானம் அன்புமணியின் பெயரை குறிப்பிடாமல், செயல் தலைவர் என குறிப்பிட்டு அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தில், "தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல், கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு விசாரணை நடத்தி தேவைப்பட்டால் தற்காலிக நீக்கம் செய்து, பிறகு, நடவடிக்கைகளை எடுத்து கட்சியின் மாண்பையும் நிறுவன மாண்பையும் நிறுவனரே தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நிறுவனருமான அவருக்குப் பொறுப்பற்ற பதிலை சொல்லி பொதுவெளியில் அவருடைய பேச்சுக்குக் கட்டுப்படாமல் இருப்பது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அப்படிப்பட்ட செயலுக்கு அந்த செயல் தலைவர் வருத்தம் கேட்டுக் கொள்வது மட்டுமல்லாமல், தனக்கு பதவி ஒன்றும் தேவை இல்லை என்றும் தொண்டராக இருப்பேன் என்றும் மூன்றாண்டுகள் பதவி வகித்த பிறகு மீண்டும் தலைவர் பதவியை அபகரிக்கும் எண்ணத்தில் நிறுவனத் தலைவர் இதுவரை கட்டி காத்து வந்த ஒரு கட்டுப்பாட்டினை பொதுவெளியில் கட்சிக்கு மட்டும் களங்கம் விளைவிக்காமல், நிறுவனத் தலைவருக்கும் களங்கத்தை உருவாக்கும் வகையில் செய்து உள்ள செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை யார் செய்தாலும் அவர்களை கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து விசாரிக்கும் என்பதை செயற்குழு வாயிலாக தீர்மானம் செய்து அப்படிப்பட்ட நடவடிக்கையை நம்முடைய மருத்துவர் அய்யா, நிறுவனத் தலைவர் மற்றும் தலைவராக உள்ளவருக்கு அங்கீகாரம் வழங்கி ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அன்புமணி அழைக்கப்பட்டதாக பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி கூறியிருந்தாலும், அன்புமணி ராமதாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேவேளையில், ராமதாஸின் மகள் ஶ்ரீகாந்தி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.