உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை விரைந்து மீட்கவேண்டும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை

ramadossukrainestudents pmkramadossurgetorescueindians
By Swetha Subash Feb 28, 2022 09:33 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் அமைதி சீர்குலைந்து, மக்கள் உயிர் பிழைக்க அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் பல்லாயிரம் இந்தியர்களை மீட்க அண்டை நாடுகள் உதவியுடன் ‘ஆபரேசன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் மீட்புப் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளது.

முன்னதாக ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதாக அறிவித்திருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் இந்திய மாணவர்களை அவமதித்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்டை நாடான போலந்து நாட்டு எல்லையில் உக்ரைன் போலீசார் இந்திய மாணவர்களை தாக்குவதாகவும், எல்லையை கடக்கவிடாமல் மறுப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை விரைந்து மீட்கவேண்டும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை | Pmk Ramadoss Urges Government To Rescue Students

“உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனுபவிக்கும் அவதிகளும் அதிகரித்து வருகின்றன.

ஒருபுறம் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் நிலையில், மற்றொருபுறம் உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் எல்லைகளில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய மாணவர்களின் துயரம் தொடருவதை அனுமதிக்கக் கூடாது. இந்தியாவுக்கு வருவதற்காக போலந்து எல்லையை கடக்க முயன்ற இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்திய மாணவர் ஒருவரை உக்ரைன் ராணுவ வீரர் எட்டி உதைக்கும் காணொலி வெளியாகியுள்ளது.

அவர் தவிர, எல்லையைக் கடக்க முயன்ற இந்திய மாணவிகள் சிலரை தலை முடியை பிடித்து இழுத்து உக்ரைன் படைகள் தாக்கியதாகவும்,

இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்கியதில் சில மாணவிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மற்றொருபுறம் ருமேனியா எல்லை வழியாக வெளியேற முடியாமலும் இந்திய மாணவர்கள் தவிக்கின்றனர்.

குண்டு மழைகளை கடந்து பல கிலோ மீட்டர் பயணித்து ருமேனிய எல்லைக்கு சென்ற மாணவர்கள், வெளியேற முடியாமல் உணவு, தண்ணீர் இன்றி மைனஸ் 4 டிகிரி குளிரில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

டெல்லியிலுள்ள உக்ரைன் தூதரை வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைத்துப் பேசுவதன் மூலம், அந்த நாட்டில் உள்ள இந்திய மாணவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் அண்டை நாடுகளுக்கு வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்.

சிறிய விமானங்களை அனுப்புவதற்கு பதிலாக பெரிய விமானங்களையும், வாய்ப்பு இருந்தால், இந்திய விமானப்படை விமானங்களை உரிய அனுமதிகளைப் பெற்று இயக்குவதன் மூலமும்

இந்திய மாணவர்களை விரைவாக தாயகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மாணவர்களை மீட்பது எளிதானது அல்ல.

கிவ்வில் இருந்து போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு வெகுதொலைவு பயணிக்க வேண்டும் என்பதால் அது மிகவும் ஆபத்தானது. மாறாக, ரஷ்யா வழியாக அவர்களை எளிதாக மீட்டு வர இயலும்.

இது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுடன் பேசி, கிவ் உள்ளிட்ட நகரங்களில் தவிக்கும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக ரஷ்யாவுக்கு வெளியேற பாதை ஏற்படுத்தித்தரவும்,

அவர்களை ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.