வேலை நிறுத்தத்தால் மக்கள் பெரும் அவதி ; பேருந்து சேவையை மேம்படுத்த வலியுறுத்தி ராமதாஸ் அறிக்கை

drramadoss nationwidestrike tnbusstrike pmkramadossreport
By Swetha Subash Mar 28, 2022 10:13 AM GMT
Report

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.

விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ, ஏஐடியூசி, யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

வேலை நிறுத்தத்தால் மக்கள் பெரும் அவதி ; பேருந்து சேவையை மேம்படுத்த வலியுறுத்தி ராமதாஸ் அறிக்கை | Pmk Ramadoss Releases Report Says Public Suffering

மேலும்,வங்கி,எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொது வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வேலை நிறுத்தத்தால் மக்கள் பெரும் அவதி ; பேருந்து சேவையை மேம்படுத்த வலியுறுத்தி ராமதாஸ் அறிக்கை | Pmk Ramadoss Releases Report Says Public Suffering

இந்நிலையில் இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் போராட தொழிற்சங்கங்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.

அதேநேரத்தில் அத்தகைய போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. ஆனால், அந்தக் கடமையை செய்வதில் தமிழக அரசு தவறி விட்டது.

ஒருபுறம் இந்த வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க. ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது. மற்றொருபுறம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியம் பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்திருந்தது.

ஆனால், அதில் அரசு உறுதியாக இல்லாதது தான் மக்களின் அவதிக்கு காரணமாகும். தமிழக அரசு நினைத்திருந்தால், போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுத்து இருக்கலாம்.

வழக்கமாக வேலை நிறுத்தங்கள் அறிவிக்கப்படும் போது போக்குவரத்து அமைச்சர், போக்குவரத்துத் துறை செயலாளர், ஆணையர், போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணிமனைகளில் முகாமிட்டு பேருந்துகளின் இயக்கத்தை உறுதி செய்வார்கள்.

ஆனால், இம்முறை ஆளுங்கட்சி தொழிற்சங்கமே போராடுவதால் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தாங்களாக முன்வந்து கூடுதல் நேரம் பணி செய்வதாக கூறிய போதிலும் அதையும் அதிகாரிகள் ஏற்கவில்லை.

அதன்படி பார்த்தால் மக்களின் அவதிக்கு அரசும் மறைமுக காரணம் என்பதை மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் இரண்டாவது திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அந்தத் தேர்வுகளில் பெரும்பான்மையான மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை.

வேலைநிறுத்தத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு இருந்தால், குறைந்தபட்சம் தேர்வுகளை ஒத்திவைத்து விட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருந்திருக்கலாம்.

தமிழக அரசின் வெற்றியை விட தொழிற்சங்கத்தின் வெற்றியையே ஆட்சியாளர்கள் முக்கியமாக கருதியதால் தான் பொது மக்களும், மாணவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாக நேர்ந்திருக்கிறது.

இது முற்றிலும் தவறு. தமிழக அரசு அதன் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பேருந்து சேவையை மேம்படுத்த வேண்டும். திருப்புதல் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.