ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுனா தொலைச்சிடுவேன்; பிரச்சினையே நீங்க தான் - பாமக அறிக்கை!
அன்புமணிக்கு எதிராக பாமக பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அன்புமணி விமர்சனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து சென்ற மாதம் நீக்கப்பட்ட மருத்துவர் அன்புமணி
தன்னை ஆதரிப்பவர்கள் மத்தியில் நேற்று (10.10.2025) ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். அது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பல செய்திகளை அவரது ஆதரவாளர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி எல்லாம் நமக்கு பெரிய விமர்சனம் ஏதுமில்லை.
ஆனால் அண்மையில் மருத்துவர் அய்யா அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்த போது பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தனர். ஓரிரு பாமகவினரை தவிர மீதி அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்து சென்றார்கள்.
பாமக அறிக்கை
வர இயலாதவர்கள் தொலைபேசி மூலமும், அறிக்கைகள் வழியாகவும் அய்யா அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரியப்படுத்தினார்கள். இது குறித்து 10.10.2025 அன்று நடந்த அக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி அவர்கள் பேசும் போது அய்யாவை வைத்து ( எக்சிபிஷன்) கண்காட்சி நடத்துகிறார்கள் என்றும்
மேலும் அய்யாவுக்கு ஏதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார். மருத்துவர் அய்யா அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏதாவது தொந்தரவு ஏற்படுமென்றால் அது மரு.அன்புமணி அவர்களால் மட்டுமே ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே, மருத்துவர் அய்யா அவர்களுக்கு மன ரீதியாகவும்,
உடல் ரீதியாகவும் பல்வேறு தொந்தரவுகளையும், அவமரியாதைகளையும் கொடுத்தது உலகமறிந்த ஒன்று. தற்போது மருத்துவர் அன்புமணியின் பேச்சு அய்யா அவர்களின் மனதை பெரிதும் காயப்படுத்தியுள்ளது.
மருத்துவர் அன்புமணி அவர்கள் மருத்துவமனைக்கு வந்த தலைவர்களை கண்காட்சி காண வந்தவர்கள் என்று பேசி இருப்பது உண்மையிலேயே அந்த தலைவர்களை அவமதிப்பது போன்றதாகும். அதையும் தாண்டி தொலைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுப்பது தரம் தாழ்ந்த சொல்லாகும்.
நீங்கள் வரவில்லை. பார்க்கவில்லை. என்பதெல்லாம் உங்களுடைய தனிப்பட்ட விஷயம். இதனை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மருத்துவர் அய்யா அவர்கள் சார்பிலும் வன்மையாக கண்டிப்பதோடு, இனி இவ்வாறான மலிவான விமர்சனத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் மருத்துவர் அன்புமணி அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.