திமுகவும், அதிமுகவும் ஆட்சியில் செய்தது சாதனை அல்ல'' : பாமக ராமதாஸ்

Dr. S. Ramadoss DMK PMK
By Irumporai May 15, 2022 10:09 AM GMT
Report

தமிழகத்தில் உண்மையான எதிர்கட்சியாக பாமகதான் செயல்பட்டு வருகிறது என தருமபுரியில் பொது குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

தருமபுரியில் இன்று பாமக சார்பில் பொதுகுழுகூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். முன்னதாக அவரை குண்டல்பட்டியிலிருந்து பாமகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுகுழு கூட்டம் தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்து. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ”திமுகவும், அதிமுகவும் ஆட்சியில் செய்தது சாதனை அல்ல.

கடந்த 40 ஆண்டுகளாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக போராடி பெற்றது, பாமகதான். இதனால் பாமக செய்ததுதான் சாதனை. இதனால் அவர்கள் செய்தது சாதனை அல்ல கடமை.

மேலும் திமுகவிற்கு திராவிடம் என்றால், பாமகவிற்கு பாட்டாளி மாடல் எனவும், கடந்த 2016 ம் தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் என்ற அடிப்படையில் முதல்வர் தேர்தலை சந்தித்தோம்.

அடுத்த 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாமக 2.0 என்ற அடிப்படையில் தேர்தலை சந்திக்க உள்ளோம் அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” ன பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், ”தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது எங்களின் நீண்டநாள் கோரிக்கை. இதை திமுக அரசியல் ரீதியாக, பூரண மதுவிலக்கு என்று தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசு பூரண மதுவிலக்கு என்பதை பற்றி பேசவில்லை. வருகின்ற நான்காண்டுகளில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளது.

எத்தனை கடைகள் மூடப்படும் என்பது குறித்து முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும். அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பது குறித்து அரசு அறிவிக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு மிக மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் அல்ல பள்ளி மாணவிகள் கூட குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல் போதைப்பொருட்கள் சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அதிகப்படியாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகாமையிலேயே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் எளிமையாக கிடைக்கின்றது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இதை கவனத்தில்கொண்டு இதற்காக தனியாக ஒரு நாள் ஒதுக்கி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், அனைத்து கட்சி அரசியல் தலைவர்களோடு கூட்டம் நடத்த வேண்டும். இதன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஆணையிட வேண்டும்.

அதேபோல் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் அதிகப்படியாக இருந்து வருகிறது. இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது போன்ற காரணங்களை சொல்ல வேண்டாம், உடனடியாக இதை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக உடனடியாக சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து.

அடுத்த தலைமுறையை அழிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய வேண்டும். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓர் ஆண்டுகளில் 10 மாதங்கள் கொரோனா நடவடிக்கையில் முடிந்துவிட்டது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நிதியமைச்சர் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாது” என்று தெரிவித்துள்ளார். இது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் எனத் தெரிவித்தார்.

மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, தேர்தல் அறிவித்த பிறகு, அதை பற்றி தெரிவிக்கின்றோம் என பதிலளித்தார்.