அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக - எத்தனை தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
அதிமுக - பாமக கூட்டணி
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், தற்போது பாமகவும் கூட்டணியில் இணைந்துள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தினார்.
இதன் பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போது, "2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி அமைந்துள்ளது. எங்களின் கூட்டணி வெற்றிக் கூட்டணி.

தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டோம், பின்னர் அறிவிப்போம். எங்கள் கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என கூறினர்.
2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த முறை அன்புமணி தரப்பில் 20 தொகுதிகள் கேட்டதாகவும், 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தர அதிமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாமக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் உள்ளிட்டோரை சந்தித்து அடுத்த கட்ட கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.