கட்சியா இது... தேர்தலில் போட்டியிட கூட பாமகவில் ஆட்கள் இல்லை...நொந்து போன ராமதாஸ்...
பாமக நிர்வாகிகள் திமுக, அதிமுக வேட்பாளரிடம் விலைபோய் விட்டனர் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கட்சி நிர்வாகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், மயிலம், வானூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 42 ஆண்டுகால அரசியல் பயணத்தில் பாமக என்கின்ற கட்சியை தொடங்கி 32 ஆண்டுகாலம் ஆகிறது. ஆனால் இன்று வரை ஒரு முறை கூட தமிழகத்தில் நாம் ஆட்சியை பிடிக்க வில்லை கடைசியாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் 5000 ஒன்றிய கவுன்சிலர்கள் இதில் 145 மட்டுமே வெற்றி பெற்றோம்.
மயிலம், திண்டிவனம், வானூர், செஞ்சி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 10 ஒன்றிய கவுன்சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். கட்சி தொடங்கி 32ஆண்டுகளில் தனியாக நின்றபோது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றார். அதன்பிறகு தனியாக நின்று நமக்கு வெற்றி பெற சக்தி இல்லை, பணமில்லை என்று கூறி கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் நிர்வாகிகள் கூறினீர்கள்.
கடந்த பேரவைத் தேர்தலில் எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணிக்குச் சென்று கெஞ்சி, கூத்தாடி 23 தொகுதிகளை பெற்று அதில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.கூடுதலாக 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றிருந்தால் பாமகவுக்கு கட்சி அங்கீகாரம் கிடைத்திருக்கும். ஆனால், இரு தொகுதிகளில் 500, 1000 வாக்குகளில் தான் தோல்வி அடைந்தோம். அதுவும் உள்கட்சி நிர்வாகிகள் குழிப்பறித்ததால் தான் அந்த வெற்றியும் பறிபோனது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதைவிட மோசம். அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தாமல் உள்ளூர் இணக்கம் என்ற அடிப்படையில் சிலர் சில கட்சிகளிடம் பணத்துக்காக விலை போய்விட்டனர்.கட்சி தொடங்கிய 32 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக நம்மைப் போன்று போராடியவர்கள் யாருமே இல்லை. அதாவது பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் நம்மிடம் உள்ள இளைஞர் இளம்பெண்கள் எந்த கட்சியிலும் கிடையாது.
மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லும் நமக்கு தமிழகத்தில் போட்டியிடவே ஆளில்லை என்று கூறும் போது நமக்கு வெட்கக்கேடு. இதனால் தேர்தலில் போட்டியிடவே ஆளில்லை என்கிற நிலை ஏற்பட்டு பலவீனமாகி விட்டோம்.இப்படியே இருந்தால் கட்சியை நடத்துவதில் என்ன பயன்?. என்ன செய்வீர்கள் என்று தெரியாது. வரும் தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 60 எம்எல்ஏ தொகுதிகள் வெற்றி பெற்றாக வேண்டும்.
திண்ணை பிரசாரம், சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே இது சாத்தியம். விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் நிலையில் அனைத்து வார்டுகளிலும் பாமக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். திண்ணை பிரசாரம், சமூக ஊடக பிரசாரத்தை இப்போதே தொடங்கி மக்கள் கொடுக்கும் உணவை அருந்தி, அவர்கள் வீட்டில் படுத்து வாக்குகளை பெற வேண்டும். அம்பேத்கர் வழிகாட்டியபடி கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்ற வாசகத்தை மனதில் பதிய வைக்க வேண்டும். அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் ஆகியோரை வழிகாட்டிகளாக ஏற்கெனவே பின்பற்றி வருகிறோம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.