அமைச்சர் - ராஜ்யசபா எம்.பி கேட்கும் பாமக... ஒப்புக்கொள்ளுமா பாஜக..?
பாஜக கூட்டணியில் இடம் பெற பாமக தரப்பில் ஒரு அமைச்சர் பதவியும், ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியும் கேட்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
பாஜக - பாமக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகளை இணைக்கும் முனைப்பில் தீவிரமாக உள்ளது பாஜக. தமிழகத்தில் பிரதான கூட்டணி கட்சிகளான பாமக - தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் இணைத்திட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அப்படி நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, பாஜகவிடம் பாமக 3 கோரிக்கைகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, மத்திய அமைச்சரவையில் இடம், ஒரு ராஜ்யசபா இடம் உட்பட மக்களவை இடங்களை கேட்பதாக கூறப்படுகிறது.
யோசனையில்...
அமைச்சரவையில் இடம் கேட்பதும், 1 ராஜ்யசபா இடத்தை கேட்பது தான் தற்போது பாஜகவை யோசனையில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு மோடி, அமித் ஷா ஆகியோரின் குட் புக்'கில் இடம் பெறவேண்டும்.
கூட்டணி என்றவுடனே அமைச்சர் பதவியை பாஜக அளிக்க ஒப்புக்கொள்ளாது. அதே போல, ராஜ்யசபா எம்.பி என்பதும் பாஜகவின் மேல்குழு முடிவு என்பதால் அதற்கு உத்தரவாதம் அளிப்பதும் சற்று கடினமான ஒன்று தான்.
ஆனால், 10 இடங்கள் என்பதில் சற்று குறைத்து வழங்க பாஜக முன்வரலாம் என்றே அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக செல்லும் நிலையிலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியில் இடம் பெறுவதை விரும்புவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.