சூர்யா, ஜோதிகாவைக் கைது செய்யவேண்டும்: காவல்துறையில் பாமக புகார்
ஜெய்பீம் படத்தின் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் சூர்யா, ஜோதிகாவைக் கைது செய்யவேண்டும் என்று பாமக சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ஜெய் பீம். இப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 2ஆம் தேதி ஆன்லைன் ஓடிடி தளமான அமேசன் பிரைம் இல் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளில் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது.அதனையடுத்து, சூர்யாவுக்கு கேள்வி எழுப்பி அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது பாமகவினர் தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அவர் மன்னிப்பு கோர வேண்டுமெனவும், இல்லாவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு வழங்கவும் வேண்டுமென வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்ட பாமக மாவட்டச் செயலாளர் விநாயகம் தலைமையில் பாமகவினர் சேலையூர் உதவி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அதில் தமிழகத்தில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் ஜெய்பீம் படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். படத்தின் இயக்குனர் ஞானவேல்ராஜா, படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகாவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் ஜாதி கலவரம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல ஓசூர் மாநகர காவல் நிலையத்திலும் சூர்யா மீது பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் ஜெய்பீம் படம் தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.