விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!
விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "விக்கிரவாண்டி தொகுதியில் நேர்மையான முறையில் பாமக வாக்குகள் பெற்றுள்ளது. ரூ. 250 கோடி செலவு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது.
மொத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குவிந்து 3 தவணையாக பணம் கொடுத்தனர். அரிசி, பருப்பு, பணம் என பலவற்றை கொடுத்தார்கள். தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறதா? அவர்களுக்கு எதற்கு சம்பளம்? பணம் பொருள் கொடுத்ததை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவில்லை. தனிநபர் வருமானத்தில் கடைசியில் இருப்பது விழுப்புரம் மாவட்டம் தான்.
ஜனநாயக படுகொலை
பணம், பொருள் என ஒரு ஓட்டுக்கு ரூ. 10,000 திமுக செலவு செய்துள்ளது. மக்களை இப்படி வைத்திருந்தால் தான் பணம் கொடுத்து ஓட்டு வாங்க முடியும் என நினைக்கிறார்கள். விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை.
ஜெயலலிதா இருந்த போது, அதிமுகவினர் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள். திமுகவை ஜென்ம விரோதியாக அதிமுகவினர் கருதினர். ஆனால் தற்போது அதிமுகவினர், திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். இடைத்தேர்தலில் முடிவு பொதுத்தேர்தலில் எதிரொலிக்காது" என்று தெரிவித்துள்ளார்.