அன்புமணி நடைபயணத்தில் பங்கேற்றால் நடவடிக்கை - பாமக தலைமை அறிவிப்பால் பரபரப்பு
பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அன்புமணி நடைபயணம்
பாமக நிறுவனர் ரமாதாஸ் எச்சரிக்கையை மீறி, அவரது பிறந்தநாளன்று, “உரிமை மீட்க, தலைமுறை காக்க” என்ற முழக்கத்துடன் திருப்போரூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது 100 நாள் நடைபயணத்தை தொடங்கினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பாமக முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். பாமக கொடியுடன் தொண்டர்களும் சென்றனர்.
இந்நிலையில், நடைபயணம் செல்பவர்களை நீதிமன்றம் முன்பு நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் இசைவுடன் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ராமதாஸ் இசைவு இல்லாமல் கடந்த 25-ம் தேதி முதல் நடைபயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாமக அறிக்கை
இது சட்ட விரோதமானது என்பதால் வட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, கட்சி தலைவர்களிடையே மோதலுக்கு வழிவகுக்கும். இதனால், நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும். நடைபயணத்தை தொடங்கி பொதுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றம் முன்பு நிறுத்த வேண்டும் என பாமக கேட்டுக் கொள்கிறது. நீதிமன்றத்துக்கு சென்று, நடவடிக்கை எடுத்து பாடம் புகட்ட வேண்டும். பிற இடங்களில் நடைபயணம் செய்தால், காவல் நிலையத்தில் பாமக சொந்தங்கள் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.