என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.. இந்தியா வந்தவுடன் இஸ்ரோ மையத்திற்கு ஓடிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இந்தியாவிற்கு வந்தவுடன் இஸ்ரோ மையத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைத்த சந்திரயான் 3 கடந்த 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு அந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது.
இந்த மிகப்பெரிய சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய போது தென்னாப்பிரிக்காவில் இருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு செல்போனில் அழைத்து வாழ்த்து கூறினார்.
மோடி வாழ்த்து
இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று காலை பெங்களூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி. இவரது வருகைக்காக பெங்களூரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விஞ்ஞானிகளை சந்தித்து பாராட்டுவதற்காக பீனியாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் சந்திரயான்-3 மிஷனில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளை சந்திக்க பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு வந்தடைந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, "இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட போது நான் இங்கு இல்லை. எனவே நாடு திரும்பியவுடன் முதலில் இஸ்ரோவுக்கு சென்று விஞ்ஞானிகளை சந்திக்க முடிவு செய்தேன். என்னாலே என்னை கட்டுப்படுத்த முடியவில்லை முதலில் பெங்களூர் சென்று இந்தியாவுக்கு சென்றவுடன் நமது விஞ்ஞானிகளை சந்திக்க முடிவு செய்தேன் " என்று கூறியுள்ளார்.