ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் - மோடியின் வினோத வேண்டுகோளால் சர்ச்சை!
"தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தள்ளிப் போடுங்கள்" என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள் விடுத்தது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஒரு அறிவிப்பால் நகைத் தொழில் துறையை மட்டமே நம்பியிருக்கும் 40 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும், லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பை குறைக்க உள்ளதாகவும் பெரும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நம் நாட்டின் அந்நிய செலவாணியை சேமித்து வைக்க உதவும். நாட்டின் நலனுக்காக சில விஷயங்களை மக்கள் செய்ய வேண்டும். தங்கம் வாங்கும் விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.
இன்னும் ஒரு வருடத்திற்கு யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம். திருமணம், விசேஷங்களுக்காக தங்கத்தை வாங்க வேண்டாம். இவ்வாறு தங்கம் வாங்குவதை நாம் குறைத்துக் கொண்டால், தங்க இறக்குமதி வெகுவாக குறையும்.

ஈரான் - அமெரிக்க போர் சூழல் மற்றும் அதனால் உருவான எரிபொருள் நெருக்கடி காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.
இதனால் ரூபாயின் மதிப்பு பாதிக்கப்பட்டு, இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையை சீர் செய்யும் வகையில் தங்க இறக்குமதியை குறைக்க வேண்டிய அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும் அதிகப்படியான தங்க இறக்குமதி மதிப்புமிக்க அந்நியச் செலாவணியை இழக்கச் செய்கிறது என்றும், நிச்சயமற்ற உலகளாவிய சூழ்நிலைகளில் பொருளாதாரக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து அவர் இந்த அறிவிப்பில் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.