பிரதமரின் தமிழக வருகை ரத்து : காரணம் என்ன?
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை ஜன.12ம் தேதி பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் அவரது தமிழக வருகை ரத்தாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சுமார் ரூ.4000 கோடி மதிப்பில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா ஜன. 12 அன்று நடைபெறவுள்ளது. முன்னதாக இந்தக் கல்லூரிகளைத் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும், இதற்காக ஜனவரி 12 அன்று , தனி விமானம் மூலம் தமிழகம் வர இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் , நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்திலும் கொரோனா தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனையடுத்து மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க பிரதமர் தமிழகம் வருவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிரதமரின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்.
தமிழ்நாட்டில் உள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் ஜனவரி 12 அன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாகவே திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டடத்தையும் காணொலி வாயிலாக திறந்து வைக்க இருக்கிறார்.