ஒமைக்ரான் நமது வீட்டு கதவை தட்டுகிறது - பிரதமர் மோடி

pmmodi mannkibaat
By Irumporai Dec 26, 2021 09:33 AM GMT
Report

நரேந்திர மோடி முதன் முதலாக பிரதமராக பதவியேற்ற 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்றும், அகில இந்திய வானொலியில் ‘மன்கி பாத்’ எனும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிவருகிறார்.

இன்று இந்தாண்டின் கடைசி மன்கி பாத் நிகழ்ச்சி இதுவென்பதால் ஸ்பெஷலாக பார்க்கப்பட்டது. ஒமைக்ரான் பரவல், பூஸ்டர் தடுப்பூசி, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் பேசினார்.

மக்களிடம் உரையாற்றிய பிரதமர், "நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தச் சமயத்தில் அனைவரும் 2021ஆம் ஆண்டை வழியனுப்புவோம். 2022ஆம் ஆண்டை வரவேற்கவும் தயாராக இருக்கிறோம்.

புத்தாண்டில், ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நிறுவனமும், வரும் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட, ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என தீர்மானம் எடுப்பார்கள். அந்த வகையில் இந்தியர்களாகிய நாம் அனைவரும் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என தீர்மானம் எடுப்போம்.

கொரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் தற்போது நமது வீட்டு கதவையும் தட்டத் தொடங்கியிருக்கிறது. அதனை வீழ்த்த பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

ஒமைக்ரான் குறித்து நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய தரவுகளைப் பெறுகிறார்கள். அவர்களின் பரிந்துரைகளின்படி நாங்கள் செயல்படுகிறோம்.

இத்தகைய சூழ்நிலையில் மக்களாகிய நீங்களும் சுய விழிப்புணர்வு, சுய ஒழுக்கத்துடன் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவின் இந்த மாறுபாட்டை எதிர்த்து செயலாற்ற இந்திய நாட்டிற்கு பெரும் சக்தி உள்ளது என நான் நம்புகிறேன்.

சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி கொடுத்துள்ளோம். பூஸ்டர் டோஸ் எனும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப் போகிறோம். ஆகவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்” என்றார்.

பின்னர் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பேசிய அவர், "ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை நாடு இழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

விபத்தில் உயிர் தப்பியிருந்த குரூப் கேப்டன் வருண் சிங், மரணத்தை வெல்ல பல நாட்கள் போராடி இறுதியில் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவருக்கு வருங்கால தலைமுறையினர் குறித்து நிறைய அக்கறை இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சவுரிய சக்ரா விருது பெற்ற வருண் சிங், அதற்காக தனது பள்ளி தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது நெஞ்சத்தையும் கனக்க வைத்திருந்தது. எத்தனை உயரத்திற்கு சென்றாலும், ஏற்றிவிட்ட ஏணியை மறக்கக்கூடாது என்ற அவரது பண்பு போற்றுதலுக்குரியது என்றார்.