‘உக்ரைன் மீதான போரை நிறுத்துங்க’ - ரஷ்யா அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
உக்ரைன் விவகாரத்தில் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என ரஷ்யா அதிபர் புதினை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை ரஷ்யா குவித்தது.
தொடர்ந்து நேற்று முதல் அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ள நிலையில் தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.
இதற்கு உக்ரைன் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா போரை நடத்தலாம் என இந்தியா முன்கூட்டியே கணித்ததால் அங்கிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புமாறு தூதரகம் கேட்டுக் கொண்டது. போர் நடைபெறக்கூடாது என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் ரஷ்யா திடீரென தாக்குதல் நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா - ரஷ்யா, உக்ரைன் - இந்தியா இடையே நல்லுறவு பேணப்பட்டு வருவதால் இந்த விவகாரத்தில் இந்தியா முக்கிய பங்கை வகிக்கலாம் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனிடையே உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் அதிபர் புதினிடம் பேசிய பிரதமர் மோடி எந்த பிரச்சனைக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்றும்,உக்ரைன் விவகாரத்தில் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவாகரத்தில் உலக நாடுகளின் பார்வை குறித்தும், அவர்களது கருத்துகளையும் பிரதமர் மோடி அதிபர் புதினுக்கு கூறியுள்ளார்.
உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் குறித்தும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இந்தியாவுக்குத் திரும்புவதற்கும் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேசமயம் சமீபத்திய உக்ரைன் தொடர்பான நிலை குறித்து ரஷ்ய அதிபர் புதின் பிரதமருக்கு விளக்கியதாக கூறப்படுகிறது.