நாடாளுமன்ற தேர்தல்; பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியா? - போஸ்டரால் பரபரப்பு

Indian National Congress Tamil nadu Narendra Modi Gujarat Government Of India
By Thahir Jan 07, 2023 01:50 AM GMT
Report

``ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால் தோல்வியை பரிசளிப்போம்'' என ராமேஸ்வரம் நகர் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியா?

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்திற்கு பின், 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தது. இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி பிரதமர் வேட்பாளர் என பாஜகவின் ஒட்டுமொத்த குரலாக இருந்தது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வலம் வந்த ரத யாத்திரை அத்வானியின் பெயர் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தது. பிரதமர் வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்படுவார் என பாஜகவினர் எதிர்பார்த்த நிலையில்,

PM Modi

தொடர் வெற்றிகளை குவித்து குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் வதோரா, வாராணசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். இதை தொடர்ந்து 2019 தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக பிரதமராக வாகை சூடினார்.

இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாராணசியில் மூன்றாவது முறையாகவும், தமிழகத்தின் தென் கோடி ஆன்மிக தலமான ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடப்போவதாக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகிறது. இந்த அறிவிப்பை பாஜக தேசிய தலைமை இன்னும் உறுதிபடுத்தவில்லை எனவும் கூறப்பட்டு வருகிறது.

போஸ்டரால் பரபரப்பு 

ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் மகிழ்ச்சி. மோடி ஒருவருக்கு மட்மே இந்தியாவில் உள்ள 544 தொகுதியில் போட்டியிட தகுதி வாய்ந்தவர் என பாஜக நிர்வாகி எச்.ராஜா இருக்கன்குடியில் மணல்குவாரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தபோது கூறியிருந்தார்.

சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி போட்டியிட்டால் எதிர்க்க திராணி இருக்கா? என பாஜகவினர் சவால் விடுத்தனர். இதற்கு பதில் தெரிவித்த ஒரு சிலர் ராஜீவ்காந்தி (திமுக மாணவரணி தலைவர்) என அவரது பதவியை குறிப்பிடாமல் பதிலளித்தனர்.

இது புறமிருக்க, ராமேஸ்வரம் நகர் காங்கிரஸ் தலைவர் ஜோ.ராஜீவ் காந்தி, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்து நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார். இதுவே, இன்று டாக் ஆப் தி டவுன் ஆக அனைவராலும் புருவம் உயர்த்தி பார்க்கப்படுகிறது.

PM Modi

அந்த போஸ்டரில், நிச்சயம் படுதோல்வி.. லட்சியம் நோட்டாவுடன் போட்டி.. ராமேஸ்வரத்தில் மண்ணை கவ்வுவது உறுதி. அதுக்கு நாங்க கேரண்டி. மோடி அவர்களே மனச தளர விடாம இங்கே வந்து நிற்க வேண்டியது உங்க கடமை... தரமா தோற்கடிப்பது எங்க கடமை... ஒத்த ஓட்டு பாஜக என அதில் கூறப்பட்டுள்ளது.

பாஜகவினர் கூறுகையில், ``மோடி எங்க நின்னாலும் ஜெயிப்பாரு. ராமநாதபுரத்தில் நின்னு ஜெயிச்சா பிரதமர் தொகுதி என்ற பெருமை நமக்கு தான். தொகுதியும் வளம் பெறும். தொழிற்சாலைகள் பெருகி தற்போது முன்னேற முனையும் மாவட்டமாக உள்ள மாவட்டம். அடுத்த 6 ஆண்டுகளில் மிக முன்னேறிய மாவட்டமாக மாறி விடும். அப்புறம் வானம் பார்த்த பூமி வஞ்சிக்கப்பட்ட பெயர் மறையும்'' என்றார்.