உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை : அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு
உக்ரைனில் உயிரிழந்த கர்நாடகத்தை சேர்ந்த நவீன் ஷேகரப்பாவின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ந் தேதி முதல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் தற்போது வரை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியிலும் விமான தாக்குதல் நீடித்து வருவதால் பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் உக்ரைன் நாட்டு ராணுவத்தினர், ரஷ்ய படைகளை முன்னேற விடாமல் தடுத்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்களை ஆபரேஷன் கங்கா மூலம் இந்தியா அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உக்ரைன் நெருக்கடி குறித்த உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் , வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
உக்ரைன் போர் சூழலால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், முப்படைகளின் தயார் நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுகிறது.

மேலும், உக்ரைனின் கார்கிவ் நகரில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.