அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த்- உடல்நலம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி !
நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிகாந்த்
விசாகப்பட்டினத்தில் கூலி படத்தின் ஷூட்டிங் நடந்த நிலையில், அவர் 2 நாட்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினார். இதற்கிடையே நேற்றிரவு நடிகர் ரஜினிகாந்த் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக குடும்பத்தினர் தரப்பில் முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் அவருக்கு ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை அவருக்கு முக்கிய மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சிகிச்சை மிகத் துல்லியமாக நடந்து முடிந்ததாகவும் இப்போது ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி
இந்த சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் தனது குடும்பத்தினரிடமும் பேசியதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது . மேலும் 24 மணி நேரம் ஐசியூ-வில் இருப்பார்.அதன் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு நடிகர் ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நலம் குறித்து லதா ரஜினிகாந்த்திடம் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டி ஆண்டவனைப் பிராத்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.