உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு எதிரொலி : பிரதமர் மோடி அவசர ஆலோசனை
உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
அந்த வகையில்,உக்ரைனில் உள்ள மரியபோல் நகரில் ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இரு நாட்டு ராணுவ படைகளுக்கும் பலத்த சண்டை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று காலை உக்ரைனின் கார்கீவ் பகுதியில் உள்ள அரசு கட்டடங்களை குறி வைத்து ரஷ்யா ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி வந்தது.
அப்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் சென்றபோது, ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் எம்.பி.பி.எஸ் படித்து வந்த 21 வயதான மாணவர் நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாணவரின் பெற்றோர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைப்பெற உள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் அவசர ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள், வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.