சென்னை 'ஆட்டோ ஓட்டுநரை' பாராட்டிய பிரதமர் மோடி - தமிழருக்கு கிடைத்த பெருமை!
பிரதமர் நரேந்திர மோடி சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை 'மன்கிபாத்' நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலியில் 'மன்கிபாத்' எனும் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன் 105வது அத்தியாயம் நேற்று ஒலிபரப்பாகியது.
அதில் பேசிய பிரதமர் மோடி சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திர பிரசாத் என்பவரை பாராட்டினார். அவர் பேசியதாவது "நண்பர்களே! தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநரான எம். ராஜேந்திர பிரசாத் ஒரு வித்தியாசமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் கடந்த 25-30 ஆண்டுகளாகவே புறாக்களுக்குச் சேவை புரிவதில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய வீட்டிலேயே கூட 200க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்க்கிறார்.
பாராட்டு
அதே வேளையில் பறவைகளுக்கு உணவு, நீர், ஆரோக்கியம் போன்ற அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறார். இதற்காக கணிசமான பணம் இவருக்குச் செலவாகிறது என்றாலும், தனது சேவையில் இவர் உறுதியாக இருக்கிறார்.
நண்பர்களே, நேரிய நோக்கம் கொண்ட மக்களின் பணியைக் காணும் போது உண்மையிலேயே மிகவும் நிம்மதி ஏற்படுகிறது, மிகவும் சந்தோஷம் உண்டாகிறது. உங்களிடத்திலும் இப்படிப்பட்ட முயற்சிகள் குறித்த தகவல் இருந்தால் அவற்றைக் கண்டிப்பாகப் பகிருங்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.