ரீல்ஸ் அதிகம் பார்க்காதீர்கள்; நண்பர்களை எதிரிகளாக நினைக்காதீர்கள் - மாணவர்களுக்கு பிரதமர் அட்வைஸ்!
முதல் தேர்வும், தெளிவும் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியுள்ளார்.
தேர்வும், தெளிவும்
பொதுத்தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும், பயத்தையும் போக்கி துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தேர்வும், தெளிவும் என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி வருகிறார்.
அந்தவகையில் இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 3000 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், நாடு முழுவதிலும் இருந்து 2 கோடியே 56 லட்சம் மாணவர்கள் மற்றும் 5.60 லட்சம் ஆசிரியர்கள் 1.95 லட்சம் பெற்றோர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி "மாணவர்கள் முன்பு எப்போதையும் விட புதுமையாக மாறி உள்ளனர். நமது மாணவர்கள் நமது எதிர்காலத்தை வடிவமைப்பார்கள். மாணவர்கள் எந்த பதற்றத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக வேண்டாம். தேர்வு எழுதும் மையத்திற்கு முன்னதாகவே சென்று விடுங்கள்.
பயம் வேண்டாம்
தேர்வு தொடங்குவதற்கு முன்பு பதற்றப்படாமல் நிதானமாக செல்லுங்கள். இதற்காக கொஞ்சநேரம் ஒதுக்கி கொள்ளுங்கள். தேர்வை பயமில்லாமல் எதிர்கொள்ள எழுத்து பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.
[
இந்த பயிற்சி உங்களிடம் நம்பிக்கையை கொடுக்கும். திறமையை அதிகரிக்கும். நண்பர்களை என்றைக்கும் எதிரிகளாக பார்க்காதீர்கள். வாழ்க்கையில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். மாணவர்களுக்கு மற்றவர்களுடன் போட்டியிடாமல் தங்களிடம் போட்டியிட வேண்டும். நெருக்கடியை கையாளும் கலையை மாணவர்கள் அவசரமின்றி படிப்படியாக கற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் நம் திறமையை பாதிக்கும். முடிவு எடுப்பதில் உறுதியாக இருங்கள்.
உங்கள் உடல்நலனுக்கு முக்கியத்தும் கொடுங்கள். செல்போனில் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை அதிகம் பார்க்காதீர்கள். இரவில் நன்றாக தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சிறிய இலக்குகளை நிர்ணயித்து படிப்படியாக உங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வழியை நீங்கள் கடைபிடித்தால் தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடுவீர்கள்" என்று பேசியுள்ளார்.