அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் முருகன் உள்பட 14 பேர் காயம்

அனல்பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 14 பேர் காயமடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு, அவனியாபுரத்தில் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழியை ஏற்றதையடுத்து, அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த காளை உரிமையாளருக்கு டூவீலர், சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் 150 பேர் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில், 1800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் ஆம்புலன்ஸ்களும், மருத்துவப் பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது.

2 சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என 14 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்த மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படுகிறது.

குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டியில் 6 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்த மதுரை மாவட்டம் வலையங்குளம் பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் முருகன் காயமடைந்துள்ளார்.

இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்