ஐ.பி.எல் - 2022 ; மெகா ஏலம் நடைபெறவுள்ள இடம் மற்றும் தேதியை அறிவித்தது பிசிசிஐ
ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள இடம், தேதிகள், வீரர்கள் பற்றிய அப்டேட்களையும் உறுதி செய்துள்ளது பிசிசிஐ.
2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும், வல்லுநர் குழுவுடன் தங்களது பணிகளை தொடங்கிவிட்டன.
புதிதாக வந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்களின் அணி பெயர், லோகோ என அனைத்தையும் வெளியிட்டு வருகிறது.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மெகா ஏலம் நடைபெறுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது. முன்னதாக பிப்ரவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் மெகா ஏலம் நடைபெறும் என்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்தது.
எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடத்தை முடிவு செய்ய முடியாமல் பிசிசிஐ திணறி வந்தது. இந்நிலையில் மெகா ஏலம் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன.
அதாவது திட்டமிட்டபடி 12 மற்றும் 13 என 2 நாட்களுக்கு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த 2 நாட்களிலும் மொத்தமாக 1,214 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.
இதில் 896 இந்திய வீரர்களும், 318 அயல்நாட்டு வீரர்களும் அடங்குவர். மெகா ஏலமானது கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள போதிலும் மிகுந்த பாதுகாப்புடன் ஏலத்தை நடத்தி முடிக்க பிசிசிஐ அனுமதி பெற்றுள்ளது.
இதற்காக முற்றிலும் பாதுகாப்பான தனியார் ஹோட்டல் ஒன்று புக் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அணிகளும் தங்களது குழு அதிகாரிகளை நேரில் வரவழைத்துவிட்டன.
சிஎஸ்கே கேப்டன் தோனியும் வியூகம் வகுப்பதற்காக சமீபத்தில் சென்னை வந்தடைந்தார். இதே போல லக்னோ அணிக்காகவும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இணைந்துள்ளார்.
இந்த முறை நடைபெறவுள்ள மெகா ஏலத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.