அவரா இவர் - மருந்து வாங்க காசில்லாமல் போராடும் பிதாமகன் படத் தயாரிப்பாளர்
பிதாமகன் படத் தயாரிப்பாளர் உடல்நிலை மோசமாகி தவித்து வருகிறார்.
விஏ துரை
தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற படம் பிதாமகன். பாலா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த படம் விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது.
இந்தப் படத்தை எவர்கிரீன் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்தவர் விஏ துரை. அவர் சத்யராஜ் நடித்த 'என்னம்மா கண்ணு, லூட்டி, விவரமான ஆளு', லவ்லி, கஜேந்திரா உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
உதவி தேவை
இந்நிலையில், சர்க்கரை நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு மோசமான உடல்நிலையில் இருக்கிறார். உடல் மிகவும் இளைத்து அவர்தானா என அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையில், பிதாமகன் படத்திலேயே பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அதன்பின் அவர் தயாரித்த படங்களும் ஓடவில்லை. இதனால் படங்களைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது இவருக்கு தயாரிப்பாளர் சங்கமும், நடிகர்களும் உதவி செய்ய முன் வரவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.