கடும் மேகக்கூட்டத்துக்குள் நுழைந்த ஹெலிகாப்டர் - அடுத்து நடந்தது என்ன? - வெளியான பரபர தகவல்கள்
இந்தியாவின் முப்படைத் தலைமை தளபதியாக விளங்கியவர் பிபின் ராவத். கடந்த 8ம் தேதி அன்று தனது மனைவியுடன் பிபின் ராவத் நீலகிரியிலுள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரிக்குச் செல்ல திட்டமிட்டார்.
அதன்படி அவருடன் அவருடைய தனி பாதுகாப்பு அதிகாரி, இன்னபிற பாதுகாப்பு கமாண்டோக்கள், விமான ஓட்டிகள என மொத்தமாக 14 பேர் பயணம் செய்தனர். இந்த ஹெலிகாப்டர் இலக்கை அடைய 7 நிமிடத்திற்கு முன்பாகவே விபத்துக்குள்ளானது. குன்னூரு அருகே நஞ்சப்பசத்திரத்திலுள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்த மரங்களில் மோதியதால் தடுமாறி கீழே விழுந்து விபத்து நேர்ந்தது.
இந்தச் சம்பவம் நடந்த இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிபின் ராவத்தும் அவரது மனைவி மதுலிக்காவும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். உயிர் பிழைத்த வருண் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இது குறித்து விசாரிக்க ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு வகையான ஹெலிகாப்டர்களை 6,600 மணி நேரம் இயக்கிய அனுபவம் கொண்ட மன்வேந்தர் சிங் மற்றும் குழுவினர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் முகாமிட்டு நேரடி விசாரணை நடத்தினார்கள்.
கடந்த 9ம் தேதி ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் பதிவான கடைசி நேர உரையாடல்களை முப்படைகளின் குழு ஆய்வு செய்தது. இந்நிலையில், விசாரணை குழு தனது முழுமையான அறிக்கையை தயார் செய்திருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து அந்த அறிக்கையில் மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேகக்கூட்டத்துக்குள் நுழைந்ததால் ஹெலிகாப்டர் வழிதவறி விபத்துக்குள்ளானது என்றும், மேகத்துக்குள் நுழைந்ததால் விமானியால் பாதையை கணிக்க முடியாமல் போயிருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
முப்படைகளின் இந்த கூட்டு ஆய்வறிக்கை சட்டரீதியாக சரிபார்க்கப்பட்ட பின், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CDS General Bipin Rawat wife aircraft accidents