ஹெலிகாப்டர் விபத்து நடக்கும் முன்பே வீடியோ எடுத்தது எப்படி? அவர் கூறிய பகீர் தகவல்
ஹெலிகாப்டர் விபத்து நடக்கும் முன்னர் சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த காட்சிகளை எடுக்கும் போது கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த அச்சக உரிமையாளர் நாசர் என்பவர் உடனிருந்தார்.
இது குறித்து நாசர் கூறியதாவது -
கடந்த 8ம் தேதி காலையில் ஊட்டிக்கு கிளம்பினோம். மேட்டுப்பாளையம் கடந்து போய் கொண்டிருக்கும் போது, காட்டேரி என்ற இடத்தில் ரயில்வே டிராக் இருந்தது. அந்த ரயில்வே டிராக்கில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது, போட்டோ எடுக்கும் போது பத்து நிமிடம் அங்கு இருந்தோம். போட்டோ எடுத்து முடித்த பிறகு அங்கிருந்து வந்து கொண்டிருந்தோம்.
அப்போது, எனது நண்பர் குட்டி என்பவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். வீடியோ எடுக்கும் போது மேலே ஒரு ஹெலிகாப்டர் மேலே நல்ல சவுண்டாக இருந்தது. அதை போகஸ் செய்து எடுத்துக் கொண்டிருந்தார். 2 செகண்டுல ஹெலிகாப்டர் மரத்தில் அடிச்சு கிழே விழுந்தது. கீழே விழுந்ததும் எங்களுக்கு ரொம்ப பயமாகி விட்டது. பதட்டமாகி விட்டது. இதுவரை இந்த மாதிரி பார்த்தது கிடையாது. உடனே அங்கிருந்து கிளம்பி போய் பார்த்தோம்.
எங்காவது ஏதாவது தெரிகிறதா என்று. ஆனால் எதுவும் தெரியவில்லை. வேறொரு இடத்திற்கு சென்றோம். அப்போது தீயணைப்பு துறை, ஆம்புலன்ஸ் எல்லாம் வந்து கொண்டிருந்தது. அவர்களிடம் என்ன விஷயம் என்று கேட்டோம். ஹெலிகாப்டர் பயர் ஆகிவிட்டது என்றனர்.
நாங்களும் அதை பார்த்தோம். எங்களிடம் அந்த வீடியோ உள்ளது என்று காவல்துறையினரிடம் சொன்னோம். வீடியோவை அவர்களுக்கு ஷேர் செய்தோம். ஸ்பாட்டுக்கு சென்ற போது கூட்டமாக இருந்தது. அங்கே நிற்காதீர்கள் என்று சொன்னதால் கிளம்பி சென்று விட்டோம்.
நடந்த சம்பவம் சரியாக 12.24. ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்து விட்டது. நல்ல பனி மூட்டம் இருந்தது. ஹெலிகாப்டர் வரும் போது ஒரு செகண்ட் ஹெலிகாப்டர் நன்றாக தெரியும். அடுத்த செகண்ட் அந்த பனி மூட்டத்துக்குள்ள போனதும், மரத்துல அடிச்சு கீழே விழுந்தது. கீழே விழுந்ததும் டாமர் என சவுண்ட். சத்தம் கேட்டதும் பதட்டம் அடைந்து அங்கிருந்து கிளம்பிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.