பிபின் ராவத்தின் மறைவு - உலக நாடுகள் இரங்கல்
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத்தின் மறைவிற்கு அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இரங்கல் தெரிவித்திருக்கின்றன. இது குறித்து அமெரிக்க ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது.
அதில், இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத். இவர் ராணுவத்தை நவீனமாக மாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின் வலுவான நண்பராகவும், இருநாட்டு ராணுவ கூட்டுறவை விரிவுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியவர் என்று வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் சார்பில், அந்நாட்டின் தூதர் அலெக்ஸ் எல்லீஸ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். அதில் பதிவில், பிபின் ராவத்தின் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், தீரமிக்க வீரராகவும், ராணுவ விவகாரங்களில் மிகுந்த சாமர்த்தியம் கொண்டவர் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலவ் தனது டுவிட்டர் பக்கத்தில், அர்ப்பணிப்பு குணம் கொண்ட கதாநாயகனையும், மிகச் சிறந்த தேசப்பற்று கொண்டவரையும் இந்தியா இழந்து விட்டது என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில், தங்கள் நாட்டின் முப்படைகள் சார்பில் பிபின் ராவ்த் மற்றும் 13 பேரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பிபின் ராவத்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளன.
