பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் எழுதியுள்ள எச்சரிக்கை கடிதம்!

BJP Corona Vaccine Modi Pinarayi Vijayan
By mohanelango Jun 01, 2021 07:22 AM GMT
Report

கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்க்கட்சிகள் ஆளும் 11 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் அலையின் தீவிரம் கடந்த சில தினங்களாக குறைந்து வந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒன்றே தீர்வாக உள்ளதால் தடுப்பூசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசே மொத்தமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து நாடு முழுவதும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தற்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜக ஆளாத 11 மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.  அதில், “ஒன்றிய அரசு மாநிலங்களை நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்கிறது,

ஆனால் தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. மேலும் பல தனியார் நிறுவனங்கள் லாபம் பார்க்க முயற்சிக்கின்றன.

தேசத்தின் நலன் கருதி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளது. இதனை ஒன்றிய அரசு தான் செய்ய வேண்டும்.

எனவே ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி மாநிலங்களுக்கான தடுப்பூசிகளைப் பெற இணைந்து செயல்பட வேண்டும்” என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.