தேர்தல் வெற்றிக்கு ஐயப்பன் துணை நிற்பார் - பினராயி விஜயன் கருத்தால் சர்ச்சை
தமிழகத்தோடு சேர்த்து கேரள சட்டமன்றத்துக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. 140 தொகுதிகளிலும் ஒரே வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பினராயில் உள்ள வாக்குச்சாவடியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
அப்போது தேர்தல் வெற்றி குறித்து பேசிய பினராயி விஜயன், ”சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் அருள் தனக்கு இருப்பதால் வெற்றி நிச்சயம். தனது அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது, நல்லவர்களுக்கு இறைவன் ஆதரவு அளிப்பார். இந்தத் தேர்தலில் மக்களின் பலம் நிரூபிக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலில் நடந்தது போல தற்போதும் எங்கள் மீதான அனைத்து போலி குற்றச்சாட்டுகளும் மக்களால் நிராகரிக்கப்படும். மக்கள் எப்போதும் எங்களுடன் இருக்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் அந்த உணர்ச்சியை நாங்கள் கண்டோம். வரலாற்று ரீதியான வெற்றியை மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள். தீர்க்கமான வெற்றியை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார். பினராயி விஜயனின் கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்ப்திவு நாள் அன்று கடவுளின் பெயரை பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும் இந்தத் தேர்தலில் சபரிமலை விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.