பாஜகவின் "பி" டீம் காங்கிரஸ்தான்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

kerala bjp congress Pinarayi Vijayan
By Jon Mar 18, 2021 02:00 PM GMT
Report

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதைச் சேர்ந்த பெண்கள் வழிபாடு செய்ய அனுமதி அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில். உச்ச நீதிமன்றம் அளிக்கும் இறுதித் தீர்ப்புக்குப் பின் கேரள அரசு உரிய முடிவெடுக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி 140 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் எனப் பேசப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இந்தச் சூழலில், மலப்புரம் மாவட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன் சபரிமலை விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைத்தும் சுமுகமாகச் செல்கிறது. இப்போதுள்ள சூழலில் சபரிமலை விவகாரத்தைப் பற்றிப் பேச வேண்டியதில்லை.

சட்டப்பேரவைத் தேர்தல் வந்துள்ள நிலையில், இப்போதுதான் சபரிமலை விவகாரத்தைச் சிலர் எழுப்புகிறார்கள். அதன் நலன்மீது அக்கறையுடன் பேசுகிறார்கள். அவர்களின் நோக்கம் தெளிவாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலின்போதும் இந்த விவகாரத்தை எழுப்பினர். சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழகில் இறுதித்தீர்ப்பு வந்தபின், சபரிமலை கோயிலோடு தொடர்புடைய முக்கியஸ்தர்களுடன் முறைப்படி கலந்து பேசி, அவர்களின் கருத்துகளை அறிந்தபின் அரசு முடிவு எடுக்கும். ஆனால், இப்போதே எந்தவிதமான முடிவையும் தெரிவிக்க இயலாது. 35 இடங்களில் வென்றால்கூட ஆட்சி அமைப்போம் என்று பாஜக தலைவர் ஆர்.பாலசங்கர் பேசியதைக் கேட்டேன். பாஜக - சிபிஎம் இடையே தேர்தல் உடன்பாடு இருப்பதான குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

உண்மையில் பாஜகவின் "பி" டீம் காங்கிரஸ்தான். பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்கிறது. ஆனால், எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களின் நோக்கம் தெளிவாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் பாஜகவின் பி டீம்என பினராயி விஜயன் தெரிவித்தார்.